
போன வாரம் அசத்தலா ஆரம்பிச்சு படு மொக்கையா முடிஞ்சு போன "அவல் கேசரி"-யப் பார்த்தோம். இந்த வாரம் 'மொக்கை'-யா ஆரம்பிச்சு ரொம்ப நல்லா முடிஞ்ச ஒரு மேட்டரை எழுதப் போறேன்.
"நன்றி பகரும் நன்னாள்"(thanks giving day) - என்று சொல்லி நாலு நாள் லீவு விட்டாங்க. பெசன்ட் நகர் பீச், உதயம் தியேட்டர், தி-நகர் கூட்டம், எனக்கு சென்னையை சுத்தி சுத்தி காட்டின 5E,D70 இது எதுவுமே இல்லாம நாலு நாள் "டைம் பாஸ்" பண்ணுடான்னா நான் என்ன பண்ணுவேன், சொல்லுங்க? ஏற்கனவே "சிக்ஸ் பிளாக்ஸ்"-ல கிடைச்ச ஒரு நல்ல அனுபவமே போதும். வெளியில போலான்னு எவன்கிட்டயும் பேச்சே எடுக்கல. இங்க இருக்கிற ஒன்னு, ரெண்டு தெரிஞ்ச தெரியாத நபர்களுக்கெல்லாம் போன், சாட் - என்று முடிந்த வழிகளில் எல்லாம் மொக்க போட்டு முதல் நாளை தீர்த்தேன். இதுக்கு மேல பேசுனா நட்பு முறிஞ்சுடும். சரி, பொழச்சி போங்கடான்னு டி.வி-யை போட்டேன்.
ஏதோ படுமொக்கையாய் ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. "Joe Somebody"-என்ற அந்தப் படத்தை முற்றிலும் விருப்பமே இல்லாமல் நான் போட்ட காபியை நானே குடிப்பது போல் பார்க்க ஆரம்பித்தேன். படம் ஒண்ணும் சொல்லிக்குற மாதிரி "டாப்" கியரில போற படம் எல்லாம் கிடையாதுங்க. ரொம்ப சாதாரண படம்தான்.
ஜோ - ஒரு அலுவலகத்தில் பல வருடங்களாய் வேலை பார்க்கும் ஒரு சாதாரண ஆசாமி. அலுவலத்தில் பதவி உயர்வு இல்லை; வீட்டில் நிம்மதி இல்லை(டைவர்ஸ் கேஸ்)...வாழ்க்கையை ஒரு வழியா ஓட்டிட்டு இருக்குற ஒரு சாதாரண ஜீவன். ஒரு நாள் அலுவலகத்தில் நடக்கும் ஒரு விழாவை ஒட்டி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளை அழைத்து செல்கிறார். "parking lot"-ல் ஒரு சின்ன பிரச்சினை ஆகி விடுகிறது. தன்னையொத்த பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்யும் தொழிலாளருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில், ஜோவுக்கு இடம் கொடுக்காமல் வேறு ஒரு ஆள் குறுக்கே வந்து தன் காரை நிறுத்துகிறார்.
காரிலிருந்து இறங்கி அந்த நபரை பார்த்து "நீ செய்தது தவறு, வண்டியை நகர்த்து" என்கிறார். ஆனால் அந்த ஆள் "மல மாடு" மாதிரி ஆஜானுபாகா இருக்கிறான். நம்மாள் அவன் முன்னாடி சுண்டெலி மாதிரி நிக்கிறார். டேய், ஒழுங்கா வாய மூடிட்டு போன்னு சொல்லிட்டு அவரை அடித்து விடுகிறான். கன்னத்தை துடைத்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். அலுவலகத்தில் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்( நம்ம ஊர் மாதிரியே). இவை எல்லாவற்றையும் விட தன் சிறு வயது மகள் முன் ஏற்பட்ட அவமானம் வேறு. காரை அமைதியாக வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்துகிறார்.
ஒரு வாரம் கழித்து அவர் செய்யும் அந்த அசாதாரணமான காரியம் எல்லோரையும் வியக்க வைக்கிறது. தன்னை அடித்த அந்த ஆளுக்கு போன் போட்டு இன்னும் ரெண்டு வாரத்துல அதே இடத்துல சண்டை போடலாம் வான்னு சவால் விடறார். சும்மா பேச்சுக்கு சொல்றார்னு பார்த்தா, அண்ணன் சீரியஸாவே களத்தில் இறங்கி விடுகிறார். தற்காப்புக்கலை சொல்லித்தரும் ஒரு நபரை அணுகி பயிற்சி எடுக்கிறார். முதலில் அவர் கொடுக்கும் அடிகளை விட வாங்கும் அடிகள் தான் அதிகம். கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொள்ள ஆரம்பித்து பின் கலக்குகிறார், அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த 'விஜய்', 'அஜீத்' , 'விக்ரம்' மாதிரி கதாநாயகன் ஒரு நாற்காலியை போட்டு நச்சுன்னு எழுந்து உட்கார ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் அலுவலகத்தில் அவர் புகழ் பரவுகிறது. எல்லோரும் அவரை ஒரு "ஹீரோ" மாதிரி உசுப்பேத்துகிறார்கள். நிர்வாகம் அவருக்கு பதவி உயர்வு தருகிறது. ஆனால் ஜோவுடைய மகளுக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லை. அவர் பழைய ஜோவாக மாற வேண்டும் என்கிறாள். ஆனால் ஜோ விடாப்பிடியாக சண்டைக்கு ரெடியாகி விடுகிறார்.
இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த நாளும் வருகிறது. இருவரும் பழைய இடத்தில் மோதிக்கொள்ள தயாராகிறார்கள். சுற்றிலும் அலுவலக நண்பர்கள் நின்று ஜோவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். ஜோவுக்கு சண்டை கற்றுக் கொடுத்த நபரும் அந்த கூட்டத்தில் நிற்கிறார். அவருக்கு ஜோவின் மீது மிகுந்த நம்பிக்கையிருந்தது. அவர் கண்டிப்பாக ஜெயித்து விடுவார். ஏனெனில் அந்த அளவுக்கு பயிற்சி எடுத்திருந்தார். அந்த ஆஜானுபாகான ஆள் கண்களில் பயம் தெரிகிறது. கைகளில் நடுக்கம். ஆனாலும் விட்டு கொடுக்காமல் "வா! மோதலாம்" என்கிறார். ஜோ ஒரு நிமிடம் அவனை உற்று நோக்குகிறார்; அவன் கண்களில் பயத்தை படிக்கிறார். கண்டிப்பாக இந்த போட்டியில் வென்று விடுவோம் என்று அவருக்கு தெரிகிறது. சட்டென்று முடிவுக்கு வருகிறார். "நாம் மோதப் போவதில்லை" என்று கூறிவிட்டு திரும்பி நடக்கிறார். மொத்த கூட்டமும் ஏமாற்றத்தில் அவரைத்திட்டி முணுமுணுக்கிறது. அந்த ஆள் அமைதியாக வந்து அவரிடம் நடந்த விஷயத்திற்கு மன்னிப்பு கெட்கிறான். அவனை பார்த்து புன்னகைத்து விட்டு தன் மகளை வந்து கட்டிக்கொள்கிறார் "பழைய" ஜோவாய். தற்காப்புக்கலை ஆசிரியர் ஜோ-வைப் பாராட்டி தற்காப்புக்கலையின் முக்கிய பாடத்தை ஜோ இன்று கற்றுக் கொண்டார் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அப்புறம் என்ன...நன்றி, வணக்கம் தான்.
படத்தின் இறுதிக்காட்சியை உற்று நோக்கினால் நமக்கு அகிம்சையின் அர்த்தம் புலப்படும். நாமும் பல இடங்களில் "ஜோ"வாய் தான் இருக்கிறோம். ஆனால் பழைய ஜோவாய். நாம் வலிமை குறைந்தவர்களாய் இருக்கும் இடத்தில் எதோ பெரிய தியாகி போல் விட்டுக் கொடுப்பதாய் காட்டிக் கொள்கிறோம். ஆனால் நம்மை விட வலிமை குறைந்தவர்களை பார்க்கையில் நமக்குள் இருக்கும் அந்த ஆஜானுபாகான ஆள் விழித்து கொள்கிறான்.
ஜோவுக்கு அந்த நபரிடமிருந்து தேவைப்பட்டதெல்லாம் அவனுடைய நியாயமற்ற செயலுக்கு அவன் மன்னிப்பு கேட்பதுதான். அதை அவர் இறுதியில் சண்டையை கை விட்டதனால் மிக எளிதாக அடைய முடிந்தது.
காந்தி சொன்ன அந்த அருமையான வாழ்க்கைப் பாடத்தை யாரோ எனக்கு திரும்பவும் சொன்னதுபோல் இருந்த்தது. முடிந்தால் படத்தை ஒரு முறை பாருங்கள். படத்தை பார்த்து விட்டு கதை வேறு மாதிரி இருந்தால், என் ஆங்கில ஆசிரியரின் முகவரியைத் தருகிறேன். போய் அவரை திட்டிக் கொள்ளுங்கள்.
ஆகவே, குழந்தைகளே! இன்னைக்கு என்னோட கருத்து இதான்,
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
Monday, December 3, 2007
நீங்கள் பழைய ஜோவா? புதிய ஜோவா?
Posted by மா.கணேஷ் குமார் at 6:53 PM 0 comments
Sunday, November 18, 2007
சமையலறையில் ஒரு மாமல்லபுரம்
"பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக்கண்டான்...எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்" - பாவ மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல். கேள்வி அதுவல்ல. எதனைக் கண்டான் சிற்பக்கலை வடித்தான்? மாமல்லபுரத்தில் ஒரு நாள் சுண்டலை மென்றுகொண்டிருந்த அந்த கணத்தில் உதித்த கேள்வி இது. க.க-வைப் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே, கேள்வின்னு ஒன்னு வந்துட்டா பதில் கண்டு பிடிக்காமல் விட மாட்டான். இந்த கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சுட்டேன், எப்படின்னு கேக்கறீங்களா....வழக்கம் போல் இந்த வாரமும் ஒரு 'யுரேகா' தான்.
ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் வந்து விட்டால் காபியுடன் காரம், இனிப்பு சாப்பிடாவிட்டால் க.க-வுக்கு கோபம் தலைக்கேறிவிடும். எப்போதும் எனக்கு இந்த கோபம் வராமல் பார்த்துக் கொள்ளும் நண்பன் இந்த முறை சமையலறைக்கு வழி காட்டி விட்டு கணினியை கட்டிக் கொண்டு அழ சென்றான். சரி, இன்னைக்கு ஒரு வழி பண்ணி நமக்குள் ஒளிந்திருக்கும் 'நளனை' வெளியில் காட்டி விட வேண்டியதுதான். என்ன பண்ணலாம்????? ஆங், 'அவல் கேசரி'...அருமையான தேர்வு. ஒரு கல்யாண பந்தியில் இரண்டாம் முறை கேட்டும் முடியாது என்று சர்வரால் மறுக்கப்பட்டு அவமானத்தை தேடித்தந்த பதார்த்தம்.
சில பல தளங்களில் வெளியிடப்பட்ட 'அவல் கேசரி' செய்முறைகளை கலந்து ஒரு புதிய செய்முறையை எழுதிக்கொண்டு சமையலறையை நோக்கி பீடுநடை போட்டேன்.
செய்முறை:
1. ஒரு கப் அவலை சிறிது நெய்யில் வறுக்கவும்.
2. ஒன்னரை கப் பாலை கொதிக்கவிடவும்.
3. கேசரி பவுடரையும், அவலையும் பாலில் கொட்டி வேகவிடவும்.
4. ஒரு கப் சர்க்கரையும் நெய்யும் கலந்து கிளறவும்.
5. சுவையான அவல் கேசரி தயார்.
ஆனால் இதில் இல்லாத ஒரு ஸ்டெப்ப நானா ஆட் பண்ணது தப்பாப்போச்சுங்க.
மூனாவது ஸ்டெப் வரை 'ஸ்மூத்'தா ப்ராஜெக்ட் போய்க்கிட்டு இருந்துச்சு. சரி, அதுபாட்டுக்கும் வெந்துட்டு இருக்கட்டும் என்று தொ.கா- வை ஆன் செய்தேன். அட..நம்ம 'மும்ஸ்'..குஷி படத்துல என்னமா பெர்மான்ஸ் காட்டிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் அதில் மூழ்கி விட்டேன்(ஹி..ஹி..இதான் அந்த எக்ஸ்ட்ரா ஸ்டெப்)...லைட்டா ஏதோ கருகிய வாசம் நாசியைத் தொலைக்க 'ச்ச..இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல...அடுப்புல எதாவது வைக்க வேண்டியது..அப்புறம் எங்கயாவது வாயப்பொலந்துகிட்டு நிக்கிறது...இந்த க.க. மட்டும் இல்லண்ணா இந்த ரூமே அலங்கோலம் ஆகிடும்' என்று சிலாகித்து கொண்டு அடுப்பில் பார்த்தால் நம்ம 'அவல் கேசரி' வாங்க சார் எங்க இந்த பக்கம்? என்று கேட்டது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், 'அவல் கேசரி' திரவ நிலையிலிருந்து திட நிலையை எட்ட எடுத்துக் கொண்ட நேரம் சரியாக ஐந்து நிமிடங்கள்.
ஒரு வழியாய் சட்டியில் இருந்து பெயர்த்து தட்டில் கொட்டி விட்டேன். அதற்கு பிறகு ஆறியவுடன் தட்டில் இருந்து அதை எடுக்க நான் செய்த முயற்சியின் அத்தாட்சி-தான் இந்த புகைப்படம்( நன்றி : நாராயணன்...எங்கள் அறையின் ஆஸ்தான போ.கி)
ஆகவே குழந்தைகளே 'அவல் கேசரி செய்தான்..சிற்பக்கலை படைத்தான்'...எனக்கு மும்ஸ் மாதிரி அவனுக்கு யாரு உதவி செஞ்சாங்கன்னு தெரியல.
Posted by மா.கணேஷ் குமார் at 6:17 PM 0 comments
Wednesday, November 14, 2007
பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வார்த்தை
நண்பர்கள் மத்தியில் ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது...இதாங்க டாபிக் : ஆங்கிலத்தில் மிகப்பெரிய வார்த்தை எது மற்றும் மிகச்சிறிய வார்த்தை எது? விக்கி, கூகிள் என்று ஆளாளுக்கு தேடி சண்டை போட்டுக்கொண்டிருக்க, வழக்கம் போல தப்பாய் சில பதில்களை சொல்லி விட்டு சில பல பல்புகளை சுமந்து ஒரு ஓரமாய் அமர்ந்து விட்டத்தை பார்த்தபடியே என் சிந்தனைக் குதிரையை தட்டி விட்டேன்.
மனதில் இருந்த பெரிய கேள்வி இதாங்க : தமிழில் பெரிய வார்த்தை எது?
தமிழ் லெக்ஸிகான், விக்கி, கூகிள் மற்றும் எனக்கு தெரிந்த சில தமிழ் பேசும் தளங்களில் தேடித்தீர்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. பதில் தெரியாமல் படுத்தால் தலை வெடித்து விடும் போலிருந்தது. சரி, இதற்கு ஒரு வழி தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் என் தமிழாசிரியர் ஒருவரால் தான் இது முடியும் என்று அவர் தொலைபேசி எண்ணை தேடினேன். அப்பொழுது எதார்த்தமாக தொலைக்காட்சியை ஆன் செய்தேன். ஏதோ ஒரு தமிழ் படத்தின் இறுதிக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது....உற்றுப்பார்த்தேன், யுரேகா!!!! கண்டுபிடித்து விட்டேன்..தமிழின் பெரிய வார்த்தையை கண்டே பிடித்து விட்டேன்.(டேய், பில்டப்ப விடு...மேட்டருக்கு வா)
இதாங்க அந்த சீன்:(சண்டையிட்டு பிரிந்த நாயகனும் நாயகியும் இறுதியில் சேரும்போது பேசிக்கொள்கிறார்கள்)
நாயகி: அத்தான்!!!
நாயகன்: கண்ணே, உனக்கு துரோகம் செய்து நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன், தயவு செய்து என்னை மன்னித்து விடு
நாயகி: அன்பே, என்ன இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் பேசுகிறீர்கள்....
ஆகவே குழந்தைகளே, தமிழில் பெரிய வார்த்தை 'என்ன மன்னிச்சிடுங்க'...வேணும்னா, யார்கிட்டயாவது சொல்லிப்பாருங்க, அவங்களும் இதையேதான் சொல்லுவாங்க.
சரி, சரி வாங்குன பல்ப தொடச்சி வச்சிட்டு போய் வேற வேலய பாருங்கப்பு.
Posted by மா.கணேஷ் குமார் at 8:47 PM 3 comments
Sunday, September 30, 2007
வாகைத்திணையில் சமீபத்தில் நான் ரசித்த மூன்று பாடல்கள்:
1. அட இதுதாம்பா உங்க தேசிய விளையாட்டு என்று ஆசியக்கோப்பையை வென்று நமக்கு ஞாபகப்படுத்திய இந்திய ஹாக்கி அணி( தோடா, நக்கல பாரு...ஹாக்கி ஸ்டிக்க புடிச்சி பாரு அப்ப தெரியும்...).
2. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என வலுவான அணிகளை வென்று 20க்கு20 உலகக்கோப்பையை கைப்பற்றிய 'இள இரத்தம் பாய்ந்த' இந்திய கிரிக்கெட் அணி.
3. சிங்கம் சிங்கிளாதான் வரும் - என்று மெக்சிகோவில் சீறிக்காட்டி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நம் விஸ்வநாதன் ஆனந்த்.
Posted by மா.கணேஷ் குமார் at 6:39 PM 0 comments
Saturday, September 8, 2007
அடிக்கல உதைக்கல ஆனா உசுர மட்டும் உருவி எடுத்துட்டாங்கய்யா
"டேய், பஸ்ல போகும்போது படியில் நிக்கக்கூடாது...மொட்டை மாடியில நின்னு எட்டிப்பார்க்காதே..விழுந்து கிழுந்துட போற...சைக்கிள்ல போகும்போது ஏண்டா இப்படி வேகமா போற?...மோதி கீதி தொலையப்போற" - என்று இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஒரு மாவீரனை,
ரோட்டில் நாய் நின்றால் அதற்கு மரியாதை கொடுத்து(பயத்துல மரியாதை அதுவா வரும்) வேறு தெரு வழியாக செல்லும் அஞ்சாத சிங்கத்தை,
இரவில் வெளியில் தனியாக சென்றால் ஒற்றைக் கண்ணன் வந்து பிடித்துக் கொள்வான் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு முரட்டுக்காளையை
(அட..இத்தனை பில்டப்பும் சாட்சாத் இந்த 'கருத்து கணேசனுக்குத்தான்')
ஒரு நாள் அவனது நண்பர்கள் பார்த்து, "ஏண்டா, வெண்ணை..இந்த ஞாயிற்றுக்கிழமை சும்மாதான இருக்க, நாங்க வெளியில போலான்னு இருக்கோம், எங்க கூட வர்றியா?"னு
விளையாட்டா கேட்க,
"என்னடா, இது நம்மளயெல்லாம் ஒரு ஆளா மதிச்சுக்கேட்குறாங்களேன்னு உடனே ஓ.கே. சொல்லிட்டேன்".
இப்படி அவங்க என்ன அழைச்சுட்டு(உள்ளபோகும்போது உண்மையிலேயே என்ன இழுத்துட்டுத்தான் போனாங்க) போன இடம் 'SIX FLAGS'(நியூ ஜெர்சி)....அட இந்த ஊரு
கிஷ்கிந்தா..MGM தாங்க.
உள்ள கொண்டுபோய் 'கிங்டக்கா'ன்னு(kingda ka) சொல்லி சின்ன பொட்டியில உக்காரச் சொன்னாங்க. நானும் நம்பி உக்காந்துட்டேன். எடுத்தாங்கய்யா வண்டிய 128 மைல் வேகத்துல...அந்த வேகத்துல கன்னத்துல சதை மட்டும் கொஞ்சம் அதிகமா இருந்தா பிச்சிக்கிட்டு போயிருக்கும்.ஒல்லியா இருந்ததுனால தப்பிச்சேன். மேல கொண்டு போய் ஒரு செகண்டுதான் நிறுத்துனாங்க.அவ்வளவுதான், சின்னவயசுல பாஸ் ஆகிட்டு சூடம் ஏத்தாம ஏமாத்தின பக்கத்து தெரு பிள்ளையாரிலிருந்து வேண்டுமென்றே டைம்பாஸ்க்கு மொக்கை போட்டு அதில் காதில் ரத்தம் வர்ற அழுத நண்பர்கள் என நான் செய்த பாவங்கள் ஒன்றொன்றாய் நினைவில் வர மொத்தமாய் ஒரு மன்னிப்பு கேட்டேன்.
இதெல்லாம் ஒரு கணப்பொழுதுதான். அடுத்த செகண்டுலயே தலைகுப்புற தள்ளி விட்டாங்க நாலஞ்சு பனைமர உயரத்துலருந்து. வயிற்றுக்குள்ளிருந்து குடல் வாய்க்கு வந்ததுபோல் இருந்தது. 'ஹைய்யா','ஹாஹா','வாவ்','ப்யூட்டிபுல்' என்று எல்லோரும் சந்தோசத்தில் கத்த(தலைகுப்புற தள்ளி விட்றாங்க, இது ஒரு சந்தோசமா? கலிமுத்திப்போச்சு) "அம்மா..." என்று ஒரு ஈனகுரல் கேட்டது. சொல்லவே தேவையில்லை. அந்த குரலுக்கு சொந்தக்காரன் மகாகணம் பொருந்திய இந்த கருத்து கணேசன் தான்.
ரெண்டு மூணு பிரட்டு பிரட்டி கொண்டு வந்து ஒரு வழியா நிறுத்தினாங்க. எங்கய்யா என் உயிருனு கேட்டா, 'அந்த ரெட்டப்பாலத்துல விழுந்துச்சே எடுத்துக்கலயா?' என்று விவேக்
ஸ்டைலில் நக்கலடிச்சாங்க. உயிரின் மகத்துவத்தை ஒரு நொடியில் புரிய வைத்த 'கிங்டக்கா' நீ எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லி அந்த இடத்திலிருந்து மெல்ல நகர்ந்தோம்.
ரொம்ப ஓவரா பேசுரன்னு நெனச்சா கொஞ்சம் கீழ இருக்க 'கிங்டக்கா' வீடியோ பாருங்க புரியும்.
http://www.youtube.com/watch?v=HN8nv4tVFuA
எங்கயாவது ஒளிஞ்சிக்க இடம் இருக்கானு தேடிப்பார்த்துட்டு இருக்கும்போது, சட்டையைப்பிடித்து கொண்டுபோய் 'சூப்பர்மேன்' ரைடுன்னு ஒன்னுல கோத்து விட்டுட்டாங்க.(அதான் கிளியரா எழுதியிருக்கான் 'சூப்பர்மேன்'னு..அப்புறம் ஏண்டா என்னை ஏத்துறீங்க?) அட...இதப்பத்தி எழுத நான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை. நம்மூர்ல ரோடு போடற இடம்,வீடு கட்டற இடத்துல எல்லாம் கலவை, ஜல்லி கலக்க ஒரு மிஷின் இருக்கும் பார்த்துருக்கீங்களா?...அதுக்குள்ள மாட்டுன ஜல்லியா நம்மள மாத்துற ரைடுக்கு பேர்தான் "சூப்பர்மேன்" ரைடு.
சூப்பர்மேன் : http://www.youtube.com/watch?v=f5II-Px1Xq8
பேட்மேன் : http://www.youtube.com/watch?v=OPZ0pHzJbjQ
நைட்ரோ : http://www.youtube.com/watch?v=GIP8M-iME2s
பசிக்குதுடானு பிரண்ட பாத்து கேட்டேன். இது ஒரு தப்பா?? வாடா ஆம்லெட் சாப்பிடலான்னு கூட்டிட்டு போய் "பேட்மேன்"-ல தொங்க விட்டுட்டான். ஒன்னும் புரியாம முழிச்சிட்டு ஏறி உக்கார்ந்தேன். ரெண்டு நிமிஷ்ந்தான்..சோலி முடிஞ்சுப்போச்சு. வயித்துக்குள்ள ஆம்லெட் போட வச்சுட்டாங்க. உசுர கெட்டியா புடிச்சுட்டு ஒரு வழியா இறங்கி வந்தேன். அடுத்து 'நைட்ரோ'நு ஒரு சாகச விளையாட்டுக்கு கூப்பிட்டாங்க. நான் கால்ல விழாத குறையா கெஞ்சி, அடம் புடிச்சி வரலனு சொல்லி ஒரு ஓரமா உக்காந்துட்டேன்.
அங்க இருந்ததுலயே எனக்கு பிடிச்சது கார் விளையாட்டுதான். காரை விட்டு இறங்கி வந்தா 'என்னடா மச்சி...குழந்தைங்க ரைடுல நீ போயிட்டு வர்ற"னு சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்க.
தப்பிச்சோம், பொழைச்சோம்னு ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தேன். இனிமே சனி, ஞாயிறு சாப்பிட்டு வீட்ல அமைதியா பொழுத கழிக்க வேண்டியதுதான்.
ஆபிஸில் சக ஊழியர், " என்ன சார், எப்படி ஒருந்தது உங்க சிக்ஸ் ப்ளாக்ஸ் ட்ரிப்?" என்று கேட்க சுற்றி முற்றி என் நண்பர்களை தேடினேன். அப்பாடா யாரும் இல்லை."இட் வாஸ்
பென்டாஸ்டிக்...ஐ ரியலி என்ஜாய்டு இட்...கண்டிப்பா இன்னொரு தடவை போகலான்னு இருக்கேன். நீங்க மிஸ் பண்ணாம போயிட்டு வந்துடுங்க" என்று அளந்து விட்டேன்.
லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், உங்களுக்காக உயிரக்கூட விடத்தயார்னு யாராவது டயலாக் விட்டா அவங்கள டெஸ்ட் பண்ண சரியான இடம் இந்த "சிக்ஸ் ப்ளாக்ஸ்".
ஆகவே குழந்தைகளே, இன்னைக்கு என்னோட கருத்து இதான்:
சனி, ஞாயிறு லீவு விட்டா அம்மா பொங்கி போடுறத சாப்பிட்டுட்டு அமைதியா வீட்ல இருங்க. அத விட்டு பிரண்ட்ஸ் கூப்பிடறாங்கன்னு சொல்லி என்னை மாதிரி வில்லங்கத்துல
மாட்டிக்காதீங்க.
Posted by மா.கணேஷ் குமார் at 1:10 AM 3 comments
Monday, August 27, 2007
ஆதலினால் காதல் செய்வீர்!!!
கல்லூரிக் காலங்களில் இருந்தே காதல் கவிதைகளிலும், காதல் கதைகளையும் தாமரை இலை தண்ணீராய்த் தான் ரசித்து வந்திருக்கிறேன்...இன்றளவும் அவ்வாறே உணர்கிறேன். சமுதாயத்தை மையப்படுத்தும் கவிதைகளே என்னை எளிதில் கவர்ந்திருக்கின்றன.(அதெல்லாம் அனுபவித்திருந்தால் தெரியும் என்கிறீர்கள்..புரிகிறது).
சில சமயங்களில் அபூர்வமாய் காதல் கவிதைகளும் என் மனதில் இருக்கை கேட்டதுண்டு. அப்படி ஒரு படைப்பு இங்கே. படைப்புக்கு சொந்தக்காரர் தபூ.சங்கர்.
அன்று
நீ குடை
விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்றுவிட்ட
மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால்
நீ எங்கோ குடை
விரிப்பதாகவே
நினைத்துக்
கொள்கிறேன்.
இதைப்போல் முன்பொரு முறை அறிமுகமாகி, ஆனால் இந்த நிமிடம் வரை புத்தம் புதிதாகவே நான் உணர்கிற பாரதியின் இந்த வரிகள்...'அடடா இந்த பீலிங்-க மிஸ் பண்ணிட்டியேடா கணேசா' என்று உச் கொட்ட வைக்கின்றன.
சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி - கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையெ - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக் குயிலோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ! - கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.
Posted by மா.கணேஷ் குமார் at 7:32 PM 3 comments
Saturday, August 25, 2007
என்று தணியும் உங்கள் குருதி தாகம்?
கோயம்புத்தூர், மும்பை...இப்போது ஹைதராபாத். பயங்கரவாதத்தின் இரத்த தாகத்திற்கு நம் சகோதரர்கள் 41 பேரை இன்று இழந்திருக்கிறோம். வெறித்தனம்,வன்முறை,பயங்கரவாதம்,தீவிரவாதம்...இப்படி எந்த பெயர் வேண்டுமானால் இருக்கட்டும். என்னால் இதை சுத்தமான 'கோழைத்தனம்' என்றுதான் அழைக்க முடிகிறது. ஏ கோழைகளே! விடுமுறையை கொண்டாட லேசர் ஷோ பார்க்க வந்த சிறுமி,தன் இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞன் - இவர்கள் எப்படி உங்கள் லட்சியத்திற்கு
குறுக்கே வந்தார்கள்? இப்படி நீங்கள் அடைய விரும்புவது எதை?
இதற்கு மூலகாரணம் அந்நிய சக்திகளாகவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் கொடுக்கும் சில பல லட்சங்களுக்கு துணை போகும் நமக்குள் ஒளிந்திருக்கும் அந்த களைகள் தான் முதலில் களையப்பட வேண்டியவை.
இந்த வழக்குக்கு தீர்வு சொல்ல எப்படியும் இன்னும் 10,12 வருடங்கள் ஆகும். இதற்குள் குற்றவாளிகளுக்கு மதச்சாயம் பூசி அவர்கள் செயலை நியாயப்படுத்த சில அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி கொண்டிருக்கும். ஆனால் இந்த வெடிகுண்டின் வெளிச்சத்தில் இருட்டாகி போன இந்த குடும்பங்களுக்கு என்ன தான் தீர்வு?
உதயம் தியேட்டர் அருகில் காசு குறைத்து கேட்டதற்காக எல்லார் முன்பும் என்னை அசிங்கமாக திட்டிய ஆட்டோக்காரனைக் கூட என்னால் சத்தியமாக இந்த சம்பவத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் தன் மகன், சகோதரன், தாய் என தன் சொந்தங்களை இந்த வெடிகுண்டு விபத்தில் பறிகொடுத்து கதறிக் கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்,இருப்பவர்கள் நிம்மதியடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
Posted by மா.கணேஷ் குமார் at 7:43 PM 0 comments
Friday, August 24, 2007
கலாம் மொழி
நான் கல்லூரியில் படிக்கும்போது கேட்டு கேட்டு புளித்துப்போன உறுதிமொழிகள்: மச்சி, இந்த நியூ இயர்லேருந்து தண்ணி,தம்ம விடப் போறேன்டா...அவள இனி பார்க்கவே போறதில்லடா.. இந்த செம்ல இருந்து ஆல் கிளியர் ஆகப் போறேன்...இனி வர சண்டே எல்லாம் வேஸ்ட் பண்ணாம ஒழுங்கா கேட்டுக்கு படிக்கப் போறேன்..
இவையெல்லாவற்றிலும் நான்,எனது - என்பவைதான் மேலோங்கியிருக்கும். ஆனால் இந்த வட்டங்களை தாண்டி சமுதாய நோக்கோடு எடுக்கப்படும் உறுதி மொழிகள் மிகச்சில. மாணவர்கள் கடை பிடிக்க திரு. அப்துல் கலாம் அவர்களின் இந்த உறுதிமொழிகளும் அத்தகையதே.
நல்ல லட்சியத்தை மேற்கொள்வேன். உழைத்து படித்து, லட்சியத்தை அடைய முயற்சிப்பேன். விடுமுறை நாளில் ஐந்து பேருக்கு, எழுத, படிக்க சொல்லித் தருவேன். வீடு, பள்ளி, கல்லுாரியில் குறைந்தது ஐந்து செடிகளை நட்டு, வளர்த்து பாதுகாத்து மரமாக்குவேன். மது, போதை பழக்கத்தால் துயரப்படும் ஐந்து பேரையாவது, மீட்க பாடுபடுவேன். துயரத்தோடு உள்ள ஐந்து பேருக்கு ஆறுதல் கூறி துயரத்தை நீக்க பாடுபடுவேன். ஜாதி, மத, மொழியின் பெயரில் எந்தவொரு பாகுபாடும் பாராட்டாது எல்லாரிடமும் சமமாக நடந்து கொள்வேன். வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க முயற்சிப்பேன். என் தாய், தாய் நாட்டை நேசித்து, பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுப்பேன். [நன்றி:தினமலர்]
யோசித்து பார்க்கையில் இவை மாணவர்களுக்கு மட்டும் கூறப்படவில்லையெனப் புலப்படுகிறது.
Posted by மா.கணேஷ் குமார் at 11:01 PM 0 comments
Thursday, August 23, 2007
இவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? - சொல்லுங்க விஸ்வநாதன் சார்
இன்றைய தேதிக்கு இந்தியாவிலேயே மிகக் கஷ்டமான வேலை எதுவென்றால் அது நிச்சயமாக மக்களவை சபாநாயகர் வேலைதான். நான் படித்த கும்பகோணம் நகர மேனிலைப்பள்ளியில் விஸ்வநாதன் என்றொரு தலைமை ஆசிரியர் இருந்தார். அவர் வந்து நின்றால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் படிக்கும் பள்ளியில் குண்டூசி விழும் ஓசை கூட கேட்கும். அந்த அளவுக்கு பள்ளியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அவர் கூட நம் மக்களவை உறுப்பினர்களிடம் கட்டாயம் தன் தோல்வியை ஒத்துக்கொண்டிருப்பார்.
பொறுமை மீறி கடைசியில் இன்று புலம்பித் தள்ளியிருக்கிறார் திரு.சோம்நாத் சாட்டர்ஜி."அடப் போங்கய்யா, இவங்களுக்கு சின்ன புள்ளைங்க தேவலாம். அதுங்க கூட கொஞ்சம் ஒழுங்கா நடந்துக்கும்".[பார்க்க:http://www.ibnlive.com/news/parties-shield-mps-veto-punishment-proposal/47353-3.html]
இன்னொரு விஷயத்தக் கேட்டா இன்னும் பகீர்ங்குது. ஒரு நிமிஷத்துக்கு மக்களவை நடக்க ஆகும் செலவு மட்டும் 22,089 ரூபாயாம்.
திருவாளர் MP அவர்களே உங்களிடம் இரண்டு கேள்விகள்:
1. நீங்கள் களேபரம் செய்யும் இந்த இடத்தில் தான் நேரு,லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் ஆட்சி செய்தனர் என்பதை நினைவில் வைத்திருக்கிறீர்களா?
2. ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இன்னொருவரும் சேர்ந்து பேசினால் யாருக்கும் எதுவும் புரியாது என்று சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். அது ஏன் லட்சக்கணக்கில் ஓட்டு வாங்கிய உங்களுக்கு புரியவில்லை?
ஏன் சிரிக்கிறீர்கள்? புரிகிறது..அதை உங்களுக்கு ஓட்டு போட்டவர்களிடமே போய் கேட்க சொல்கிறீர்கள்...
Posted by மா.கணேஷ் குமார் at 9:35 PM 0 comments