Wednesday, September 8, 2010

ஒரு பொன் மாலைப் பொழுது


அடியேன் இந்த பூமியில் அவதரித்து கிட்டதட்ட ஏழு, எட்டு ஆயிரம் நாட்கள் உருண்டோடி விட்டன. அதற்குள் நான் கடந்து வந்த முள்படுக்கைகள் எத்தனை, முரட்டு யுத்தங்கள் எத்தனை. கலைஞர் குரலில் சொல்ல வேண்டுமானால் "தென்றலைத்தீண்டியதில்லை நான், ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்". சரி, சரி "மேல்கட்டை" (பில்ட்-அப் தாம்பா) விட்டு விஷயத்துக்கு வருவோம்.

இப்படி இத்தனை "எத்தனைகளை" வாழ்வில் கடந்திருந்தாலும் அடி மனதில் ஒர் ஆசை மட்டும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. அது ஒரு பகல் இரவாகும் அந்த அற்புதமான தினசரி அதிசயத்தை பார்க்காததுதான்.

அன்று:

அம்மா, அப்பாவைப் போல் வானம் நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட தருணமும் நமக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. சிறுவயது முதல் நான் வசித்து வந்தது ஒரு ஓட்டு வீடு. பொதுவாக ஓட்டு வீடுகளில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக சிறிய கண்ணாடி பதித்து வைத்திருப்பார்கள். அதன் வழியாகவே இரவு வானத்தைப் பார்க்க வேண்டியிருந்ததால், உங்களுக்கெல்லாம் ப்ளாஸ்மா டி.வி. போல் தெரியும் வானம் எனக்கு போர்டபிள் டி.வி. அளவே காட்சி தந்தது. இதைத் தவிர கெப்ளரின் விதிகள், புவி மைய, சூரிய மைய கோட்பாடுகள் என்று பள்ளிக்காலங்களில் அரைத்தூக்கத்தில் கேட்ட விஷயங்கள் "இதுக்கு மேலயும் வானத்தை பாப்பியா, பாப்பியா" என்று கேட்டு வானத்தை நம்பியார், செந்தாமரை லிஸ்டில் சேர்த்து வைத்தன.பிறகு கல்லூரி நாட்களில் பின்பற்றிய முன் தூங்கி பின்னெழும் கொள்கையால் பகல்களுடன் மட்டுமே நாட்களைக் கழிக்க வேண்டியதாகி விட்டது. அது மட்டுமன்றி பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்த்து நடக்கும் பழக்கம் வேறு வானத்தை எனக்கு மறக்கடித்து விட்டது.

பின்பொரு காலைப்பொழுதில் வேலை தேடி சென்னையில் காலடி வைத்த போது பின்மண்டையில் யாரோ சுளீரென்று அடித்தது போல் இருந்தது. திரும்பி பார்த்தால் நம்ம சூரிய பகவான் "என்னடா மொறைக்கிற" என்று தன் ராகிங்கை ஆரம்பித்தார். ஒரு வேலை மட்டும் கிடைக்கட்டும், அப்புறம் ஏ.சி., அபார்ட்மெண்ட்னு ஒளிஞ்சிகிட்டு உன் மூஞ்சிலேயே முழிக்க மாட்டேன் என்று சபதம் போட்டு வேலையும் தேடியாகி விட்டது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளில் நான் சந்தித்த அந்தி நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வேலை முடிந்து பஸ்ஸில் ஏறும் நேரங்களில் வானத்தைப் பார்த்தால் "ஹாய் கருத்து, ஹவ் வாஸ் த டே" என்று மிஸ்டர்.நிலா சிரித்துக் கொண்டிருப்பார். மெல்ல மெல்ல மாலைப் பொழுது "வெள்ளை நிறமாய்" இருக்கும் போலும் என்று நினைக்கும் "வெள்ளந்தி" மனிதனாய் மாறிப்போனேன். கடைசியாக நான் குடியிருந்த வேளச்சேரி வீட்டின் மொட்டை மாடியின் புண்ணியத்தில் என் வான எதிர்ப்பு நிலை ஒரு முடிவுக்கு வந்தது.

வேலை முடிந்து வீடு திரும்பியதும் மொட்டை மாடியில் தினமும் அமர்ந்து இரவு வானத்தின் அழகை ரசிக்கத் தொடங்கினேன்.உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த நாட்களில் என் வான ஆராய்ச்சி உச்சியில் இருந்தது. முதலில் பதினொன்றாம் வகுப்பு இயற்பியல் பாட புத்தகத்தை வாங்கி படித்தேன். இரண்டு முறை கோளரங்கத்திற்கு விசிட் அடித்தேன். கரடி வடிவ சப்தரிஷி மற்றும் வேடன் வடிவ ஒரியன் என்று விண்மீன் குழுக்களுடன் உலவத் தொடங்கினேன். அந்த காலகட்டத்தில் மட்டும் தமிழக அரசு சூரியக் குடும்பத்திற்கு ஒரு ரேஷன் கார்டு கொடுத்திருந்தால் அதில் என் பெயரும் இடம் பெற்றிருக்கும். இந்த வான ஆசையானது டீயைக்கூட ஒசியில் குடிக்க நினைக்கும் என்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு அறிவியல் ஸ்டாலில் 700 ரூபாய் கொடுத்து ஒரு தொலை நோக்கி வாங்கும் அளவுக்கு கொண்டு விட்டிருந்தது.

இந்த காலகட்டத்தில்தான் என் மேனேஜர் என்னைக் கூப்பிட்டு "தம்பி நீ வானத்துல பிடுங்கின ஆணியெல்லாம் போதும், அமெரிக்கா சென்று தங்களின் அரும்பணியைத் தொடரவும்" என்று ஆணை பிறப்பித்து ஒரு வானியல் மேதையின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அமெரிக்க மண்ணைத் தொட்டதிலிருந்து ஆர்குட், பேஸ்புக், டாரண்ட், சமையல் என்று என் ஓய்வு நேரத்தில் ஒரு சாதாரண சாப்ட்வேர் இஞ்சினியராய் மாறிப்போனேன்.

இன்று:

அறை நண்பர்கள் அனைவரும் விடுமுறைக்காக வெளியே சென்றிருக்க கருத்து கணேசன் மட்டும் அறையில் தனித்து விடப்பட்டேன். மாலை நேரம் தூக்கம் கலைந்து கையில் தேநீருடன் பால்கனி சென்றால் வானம்!!!! அது சின்ன பால்கனி என்பதால் "கொஞ்சம் வானம், நிறைய தேநீர்".

உண்மையில் பகல் இரவாகும் அந்தக் காட்சி அற்புதமானது. மேகத்துடன் வானம் அழகு என்றால் மேகமற்ற தெளிவான வானமோ மேலும் அழகானது. இரண்டாவது ரகம்தான் நான் இன்று ரசித்தது. என் வீட்டு பால்கனியிலிருந்து பார்க்கையில் வானம் கிட்டதட்ட ஒரு சதுர வடிவ இடைவெளியில் தெரிந்தது. எதிரே வரிசையாக வளர்ந்திருந்த மரங்கள் வானப் புடவையின் பச்சை நிற ஜரிகையாய் ஜொலித்தது. நேரொலெக், ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரங்கள் தோற்கும் அளவுக்கு வானம் இன்று வண்ண வேடிக்கை நடத்திக் கொண்டிருந்தது. நீலம், சிகப்பு, ஆரஞ்சு என்று வர்ண யாகம் நடத்தி கடைசியாய் கருப்பு போர்வையை தன் தூக்கத்திற்கு துணையாய் இழுத்தது.

அதுவரை பச்சை நிற பார்டராய் ஜொலித்த மரங்கள் கொஞ்சம், கொஞ்சமாய் கருப்படித்து வானத்துடன் கலக்க ஆரம்பித்தன. தோழமை கொண்ட இரு நெஞ்சங்களில் ஒளிந்திருந்த காதலைப் போல ஒன்றுமற்றிருந்த வானத்தில் நட்சத்திரம் ஒன்று மெல்ல முளைத்தது. ஆகா, நம்மைப் போலவே அதுவும் சோலோ நட்சத்திரம் போல என்று நான் பீலிங்க்ஸ் காட்டிய அந்த நேரத்தில் "எவன்டா அவன் என் ஆள சைட் அடிக்கிறது" என்று இன்னொரு நட்சத்திரம் எட்டிப் பார்த்து முறைத்தது. அந்த இருட்டில் மேலும் பல நட்சத்திர மனிதர்கள் மெல்ல வெளிச்சத்திற்கு வரத்தொடங்கினர். இவ்வாறாக ஒரு இரவு முளைக்கும் அந்த அற்புத தருணத்தை தேநீருடன் பருகி முடித்தேன். இந்த நட்சத்திரங்கள் பல நூறு ஒளி ஆண்டுகள் நம்மை விட்டு தள்ளி உள்ளனவாம். அப்படியாயின் நாம், நம் அப்பா, தாத்தா பிறப்பதற்கு முன் பிறந்த ஒளிக்கற்றையையா நாம் இப்போது பார்க்கிறோம். ஆச்சர்யம்!!!

ஆகவே, குழந்தைகளே யாரையும் டம்மி பீஸ் என்று உதாசீனப்படுத்த வேண்டாம். அவர்களும் என் வானத்தைப் போல பல ஆச்சரியங்களை சுமந்திருக்கலாம்.