Sunday, July 6, 2008

இந்திய வரலாறு, மிக எளிமையாய்...

சமீபத்தில் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார்(அட, நம்ம விகடன் 'மதன்' தாங்க) எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகம் படித்தேன். படிக்க படிக்க, இந்திய வரலாறை

இவ்வளவு எளிதாகவும், பக்கத்துக்கு பக்கம் ஆர்வம் தூண்டும் வகையிலும் எழுத முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன். தைமூரில் ஆரம்பித்து கடைசி முகலாய அரசர் பகதூர் ஷா வரையிலும் நம்மை புத்தகம் கட்டி வைத்து விடுகிறது, இது மதன் அவர்களின் எழுத்துத் திறனுக்கு நல்ல சான்று.

கஜினி,குதுப்மினார்,கோஹினூர்,தாஜ்மஹால்,பாபர்,அக்பர் என்று நாம் கேள்விப்பட்ட பலவற்றைப் பற்றி நாம் கேள்விப்படாத பல விஷயங்களை நன்றாக விளக்கியிருக்கிறார். அவற்றுள் என்னைக்கவர்ந்த இரு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

முதலாவது விஷயமும் ஒரு முதலாவதைப் பற்றியதே. தெளிவாகச் சொன்னால், டெல்லி அரியணையை அலங்கரித்த முதலாவது பெண் சுல்தான் ரஸியா பேகம்தான் அது. இவர் குதுப்மினார் கட்டி முடித்த 'இல்துமிஷ்'ன் மகள். அறிவு, வீரம், அரசியல் திறம், நிர்வாகத்திறமை என்று நாடாளும் மன்னனுக்கு உரிய சகலமும் பெற்றிருந்த இந்த பெண் புலிக்கு முதலில் நாடாளும் உரிமை மறுக்கப்பட்டது. ஏன் தெரியுமா? அது 'பெண்' புலி...அதுதான். இன்றும் பெண்களுக்கு முகத்திரை அணிவிக்கச் சொல்லும் பழக்கம் உள்ள ஒரு சமுதாயத்தில் பிறந்த ரஸியாவுக்கு அன்று எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிருக்கும். அவர் டெல்லி அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தது மொத்தம் மூன்றே ஆண்டுகள்தான். பின்னர் ஒரு போரின் போது சில இந்து வீரர்களால் கூடாரத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

ரஸியாவைப் பற்றிய இந்த நல்ல விஷயங்களை சொன்னது போலவே அவரின் குறைகளையும் மதன் பாரபட்சமின்றி சொல்லியிருக்கிறார். உதாரணம், அடிமை யாகூப் மீது அரசி கொண்ட நட்பு.கி.பி.1236-ல் ஆட்சிக்கு வந்த ரஸியா பேகத்திற்கு பிறகு வேறு பெண் சுல்தான்களை காலம் அரியணைக்கு அனுமதிக்கவில்லை. எனவே அவரே கடைசி பெண் சுல்தானாகவும் அறியப்படுகிறார்.

தற்போது இரண்டாவது விஷயத்திற்கு செல்வோம். பள்ளிப்பாடங்களில் பாபர் மற்றும் அக்பருக்கு இடையில் 'ஷெர்ஷா' என்னும் ஆப்கானிய மன்னர் ஆண்டதாக அறிந்திருந்தேன். அவரைப் பற்றி மதன் கொடுக்கும் தகவல்கள் உண்மையிலேயே அந்த மன்னர் மீது சற்று மரியாதை ஏற்பத்துகிறது.

பாபர் - மொகலாய சாம்ராஜ்யம் நிறுவியவர்; அக்பர் - அதை இன்னும் பெரிதாக்கி, நல்ல நிர்வாகம் அளித்தவர். அந்த பாபரின் மகனும் மற்றும் அக்பரின் தந்தையுமான ஹீமாயூனை
தோற்கடித்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தியவரே இந்த 'ஷெர்ஷா'. இவர் ஆரம்பித்து வைத்த பல நல்ல விஷயங்களை தொடர்ந்ததால்தான் அக்பரின் ஆட்சி முறை சிறந்து விளங்கியது.

1. மத்திய அரசு, மாநில கவர்னர்கள், பெரிய அதிகாரி வர்க்கம் - போன்றவற்றை ஆரம்பித்தவர் ஷெர்ஷாதான்.(இவை அக்பர் அல்லது ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு என்று இதுநாள் வரை நான் நம்பியிருந்தேன்).
2. இவரது சாம்ராஜ்யம் 'சர்க்கார்கள்' மற்றும் 'மாவட்டங்கள்' என்று பல பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கை குறைக்க அடிக்கடி அவர்களை இட மாற்றங்கள் செய்தார்.
3. நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். விளைச்சல் இல்லாக் காலங்களில் விவசாயக் கடன்களைத்(ப.சி-யின் முன்னோடியோ!!!) தள்ளுபடி செய்தார்.
4. ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டது. தண்டனைகள மிகக் கடுமையாக்கப்பட்டன.
5. முக்கியமாக 'இந்து - முஸ்லிம்' பார பட்சம் பாராமல் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று ஆட்சிக்கு வந்து இன்று ஒன்றும் செய்யாமல் 'கஜானாவை' மட்டும் காலியாக்கும் சில அரசியல்வாதிகளை பார்க்கையில் 'ஷெர்ஷா'-வை படித்து நாம் பெருமூச்சே விட முடிகிறது.

இவ்வாறு இன்னும் பல சுவையான விஷயங்களை கொஞ்சமும் சுவை குன்றாமல் சொன்னதற்காக 'மதன்' அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இன்னொரு ஆச்சரியம், இந்த புத்தகத்திற்கு ஓவியம் வரைந்தது மதன் என்றால் நீங்கள் ஏமாந்துதான் போவீர்கள், காரணம் ஓவியம் வரைந்தது 'அரஸ்'. மிக நன்றாக வந்திருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்..விலை : 110 ரூபாய்கள், விகடன் பிரசுரம்.

பிரிவதற்கு முன் இரு பொது அறிவு கேள்விகள்(தூர்தர்ஷன் அறிவோம் அறிவை நிகழ்ச்சியில் கேட்கப்பட்டவை) :

1. பிறகோள்களில் இருக்கும் உயிரினம் பற்றி படிக்கும் துறையின் பெயர் என்ன?
2. DEIMOS, PHOBOS - அப்படி என்றால் என்ன? விடை தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள். அவை பற்றி மேலும் உங்களுக்குத் தெரிந்த கருத்துக்களையும் பகீர்ந்தீர்களாயின் அடியேன்

அறியாமை போக்கிக் கொள்வேன்.

மீண்டும் சந்திப்போம்...

Friday, March 21, 2008

செல்வி ஓடிப் போகிறாள்....

1 . அவன்

யாரோ ஜன்னலை சாத்துவது போன்ற உணர்வு அவருக்கு தெரிந்தது. கண் விழித்துப் பார்த்தார். தூக்கத்தில் கனவு கண்டதுபோல் உணர்ந்தார். இருந்தும் உறுதிப்படுத்திக் கொள்ள, எழுந்து கண்ணாடியை அணிந்தார். இரவு விளக்கின் வெளிச்சத்தில் மனைவி அயர்ந்து தூங்குவது தெரிந்தது. மெல்ல எழுந்து நடு அறைக்கு வந்து விளக்கை போட்டார். மகளின் அறை திறந்திருப்பது தெரிந்து உள்ளே சென்றார். ஜன்னல் சாத்தப்பட்டிருந்தது. மேஜை இருந்த இடத்திலேயே இருந்தது. அதன் மேலே மேஜை விளக்கும் இருந்தது. ஆனால் மகள் மட்டும் இல்லை!!! அதற்கு பதில் அந்தக் கடிதம் மட்டும் மேஜை மேல் இருந்தது.

கடிதத்தை பிரித்துப்படிக்க ஆரம்பித்ததும், கண்கள் குளமாக ஆரம்பித்தது. அன்புள்ள என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த கடிதத்தின் வரிகள் இவ்வாறு படர்ந்திருந்தன.

"...........நான் யாருடன் வாழ்வதற்காக செல்கிறேன் என்று உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. அவரை உங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் திருமணம் என்பது நீங்கள், நான் மற்றும் அவர் மட்டும் சேர்ந்து நடத்துவது அல்ல. உற்றார், உறவினர், சொந்தம் என்று எங்கிருந்தோ வந்த இவர்கள்தான் அதை தீர்மானிக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி என்ற ஒன்றை சொல்லி இவர்கள் முன் அவர் அவமானப்படுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அவருடைய அப்பாவும் எங்கள் திருமணத்தை ஆதரிக்காததால்தான் இறுதியில் இந்த முடிவுக்கு வந்தோம்.

இந்தத் திருமணத்தின் காயம் காலப்போக்கில் ஆறும். அன்று உங்கள் மடியில் புதைந்து அழுது மன்னிப்பு தேடுவேன்.

-இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்"


கடிதத்தை படித்து விட்டு கண்களை தோளிலிருந்த துண்டினால் ஒற்றிக் கொண்டார். கிரில் கதவைத் திறந்து மகள் வெளியேறி நடந்து கொண்டிருந்ததை ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடிதத்தை மடித்து தனக்கு பிடித்த மகாகவி கவிதைத் தொகுப்பு புத்தகத்தின் இடையில் வைத்து மூடினார். மேஜை விளக்கை அணைக்க மறந்திருந்தார். அந்த வெளிச்சத்தில் புத்தகம் ஒரு கடிதத்தை படித்துக் கொண்டிருந்தது.

2 . அவள்

அந்த பாலைவனத்தில் தூரத்தில் காத்திருக்கும் ஒரு உருவத்தை நோக்கி அவள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள். ஓட்டம் கடுமையாக இருந்தது. திடீரென்று வெயிலின் உக்கிரத்தில் அவள் மயங்கி விழுந்தாள். சட்டென கண் விழித்தாள். மின் விசிறி அதன் உச்சத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அருகில் அன்புக் கணவர் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த நொடியே அவளுக்கு புரிந்தது, பாலைவனம் கனவில்தான் வந்ததென்று. ஆனால் தாகம் மட்டும் உண்மையாக இருந்தது.

சமையலறைக்கு சென்று தண்ணீர் அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பக்கத்து அறையை எதேச்சையாகப் பார்த்தாள். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இந்த வீடிலிருப்பவர்கள் சோம்பேறித்தனத்தில் E.B.-க்காரன் வாழ்கிறான் என்று சொல்லிக் கொண்டு விளக்கை அணைக்கச் சென்றாள்.

புத்தகத்தின் இடையில் அந்தக் கடிதம் படபடத்துக் கொண்டிருந்தது. காலியாய் இருக்கும் படுக்கை, பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் கடிதம் - அவளால் யூகிக்க முதிந்தது. பிரித்துப்படித்தாள். அழுகைப் பொத்துக்கொண்டு வந்தது. முந்தானையில் வாயை மூடி முடிந்த மட்டும் அழுதாள். கடிதத்தை மடித்து வைத்துவிட்டு, கண்களைத் துடைத்தாள். கடிகாரத்தையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். மணி பதினொண்ணரையைக் காட்டியது. அவளுக்கு மயங்கி விழத்தோன்றியது. சற்றே தன்னைத் தேற்றிக் கொண்டு விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்தாள்.

3. அவர்கள்

அந்த ரயில் நிலையத்தில் அவன் மட்டும் தனித்திருந்தான். எப்பொழுதும் அந்த நேரத்தில் இறங்கி செல்லும் பயணிகளையே பார்த்திருந்த அந்த ரயில் நிலையம் அப்பொழுதுதான் ரயில் ஏறக் காத்திருக்கும் ஒருவனைப் பார்த்திருந்தது.
"சரியா 11:30 மணிக்கு ட்ரெயின். நீ மட்டும் வரலை, அப்புறம் நான் உன் கிளாஸ்மேட் ரெட்டை ஜடை கனகா அவளோட புருஷன். எங்கப்பா ஒத்த கால்ல நிக்கிறாரு, அவளை கட்டிக்கச் சொல்லி. மறந்துடாத. அப்புறம் என்ன சொல்லி குத்தமில்லை" - சற்று அதிகமாகவே மிரட்டியிருந்தான்.

இருந்தும் அவள் 11:20 ஆகியும் வராதது சற்று பயத்தை ஏற்படுத்தியது. இன்னும் ஐந்து நிமிடத்தில் அவள் வரவில்லை என்றால் அவன் காதல், காதலி என எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியதுதான்.

அப்பாடா, தூரத்தில் அவள் வருவது தெரிந்தது. அதள பாதாளத்தில் விழ இருந்த காதலை 11:25-க்கு வந்து காப்பாற்றி விட்டாள். இப்பொழுது பயம் விலக குற்ற உணர்ச்சி எட்டிப்பார்த்தது. அம்மா எப்படியெல்லாம் அழுவாளோ, நினைத்தாலே பாவமாய் இருந்தது. அந்தக் கடிதம் நிச்சயம் அவன் நிலைமையை அவளுக்கு புரிய வைத்திருக்கும். அடுத்த சில மாதங்களில் கண்டிப்பாய் கடிதம் எழுத வேண்டும்.


சரியாய் பதினொண்ணரைக்கு ரயில் வந்தது. இருவரும் கைகோர்த்தபடி ஏறி அமர்ந்தனர். காதலர்களை சுமந்த புது உற்சாகத்தில் ரயில் புது வேகம் எடுத்தது.

4. மீண்டும் அவள்

தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த அவள் மெல்ல எழுந்து பார்த்தாள். எல்லாரும் உறங்கி கொண்டிருந்தார்கள். ஏற்கனவே எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து மேஜையில் வைத்து விட்டு, உடைகளை மெல்ல எடுத்து பெட்டிக்குள் வைத்தாள். நினைவுக்கு வந்த மேலும் சில அத்தியாவசியப் பொருள்களையும் எடுத்து வைத்தாள். பெட்டியை எடுத்து வைத்துவிட்டு மணியைப் பார்த்தாள். 11:10 ஆகியிருந்தது. இன்னும் இருபது நிமிடங்களில் ரயில் வந்து விடும். அவனோடு வாழப்போகும் புதுவாழ்வை நினைக்க மகிழ்ச்சியாய் இருந்தது.

11:15-க்கு பெட்டியை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். பெரிய மீசையுடன், கையில் அவள் எழுதிய கடிதத்துடன் அவள் தந்தை நின்றிருந்தார்.

"சீ..நாயே, குடும்ப மானத்த வாங்க கெளம்பிட்டியா" என்று வேகமாய் ஒரு அறை விட்டார். கதவின் விளிம்பில் பட்டு நெற்றியில் ரத்தம் சொட்ட அவள் விழுந்தாள். மேலும் சில அறைகள் விழுந்தது. விளக்கு போடப்பட்டு வீட்டில் இருந்த அனைவரும் எழுந்தனர்.

அம்மா அழுது தீர்த்தாள். வீடே அல்லோகல்லோலப்பட்டிருந்தது. ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தார்கள்.

அவள் ஒரு ஓரமாய் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள். மணி 11:45-ஐ தாண்டியிருந்தது.


5. மீண்டும் அவன்

ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து விட்டு அவசர அவசரமாக அவன் ஓடி வந்தான். ரயில் நிலையத்தில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மணி பார்த்தான். இன்னும் அரைமணி நேரம் இருந்தது.

பயணிகள் காத்திருக்க போடப்பட்டிருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தான். பதட்டத்தைக் குறைக்க பையில் வைத்திருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்தான்.

"சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா...சூரிய சந்திரரோ" - சட்டென்று கண்முன் அவள்தான் ஞாபகத்துக்கு வந்தாள். இதே கவிதையை எத்தனை முறை அவளைப் பார்த்து கூறியிருப்பான். எல்லா சமயங்களிலும் அவளிடமிருந்து ஒரே பதில்தான் வரும். "உங்களுக்கு வேற வேலையே இல்ல, போங்க". சிரித்த படியே புத்தகத்தை மூடிவிட்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

மணி 11:25-ஐத் தொட்டிருந்தது. இன்னும் அவளைக் காணவில்லை. பயத்துடன் சற்றே அழுகையும் சேர ஆரம்பித்தது.

ஐந்து நிமிடம் தாமதமாய் ரயில் வந்தது. ஆனால் அவள் வரவில்லை. கண்களைத் துடைத்த படியே எழுந்தான். ரயில் பெட்டிக்குள் தனியாய் அமர்ந்தான். தலையை எட்டிப்பார்த்து தூரத்தில் அவள் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டேயிருந்தான்.

இது எதுவும் தெரியாத ரயில் வழக்கம் போல் தன் பயணத்தை தொடங்கியது.

Friday, January 11, 2008

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே!!!


இது கருத்து கணேசன் பள்ளிப் பருவத்து நிகழ்ச்சி. எங்கள் வரலாற்று ஆசிரியர் பல்வேறு தலைவர்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். மதியம் சாப்பிட்ட தயிர் சாதம் வேலையைக் காட்ட தலைவர்களின் புண்ணியத்தில் தாலாட்டு கேட்டுக் கொண்டிருந்தோம். சந்திர குப்த மௌரிய காலத்தில் ஆரம்பித்து பசுமைப்புரட்சி சி.எஸ் வரைக்கும் வந்திருந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பாடத்தை நிறுத்தி விட்டு எங்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

"எல்லோரும் உலகத்தைப் பார்த்து அதன் வழியில் ஓடிக்கொண்டிருக்க இவர்கள்தான் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்கள், அதனால்தான் அவர்களை தலைவர்களாக கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட ஒரு செயலை உங்களை செய்ய சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?"

அறிவியலில் ஆரம்பித்து சட்டம் ஒழுங்கு கட்டிக்காப்பது வரை ஆளாளுக்கு ஒரு பதிலை சொல்லிக் கொண்டிருந்தனர். எந்த பதிலிலும் வரலாற்று ஆசிரியர்க்கு திருப்தி இல்லை.

"ம்ம்ம்..இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க..உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்" - என்பது போல பார்த்தார்.

"டேய் சோவை (ஹி,ஹி வ.ஆ நமக்கு ஆசையா வச்ச செல்லப் பேரு) நீ எல்லாரும் திரும்பி பார்க்கிற மாதிரி என்ன பண்ணுவ?"

ஆழ்ந்த யோசனையோடு எழுந்தேன்...'ம்..ம்' தொண்டையை செருமியதும் 'புகழேந்தி கேள்விக்கு அரங்கனார் சொல்லப்போற பதில்' மாதிரி மொத்த வகுப்பும் அமைதியானது.

"சார், பெயர் மாற்றம் செய்வேன் சார்"

வரலாற்று ஆசிரியரின் முகத்தில் டன் கணக்கில் ஆச்சரியம். அடடா, ரொம்ப புதுசா பையன் ஏதோ சட்டம் கொண்டு வரப்போகிறான் என்பது போல பார்த்துக் கொண்டே,

"புரியலப்பா..கொஞ்சம் விளக்கமா சொல்லு" என்றார்.

"நம்ம ப்யூன் மாணிக்கம், நீங்க, நம்ம ஹெட்மாஸ்டர் ஏன் நம்ம முதலமைச்சர், பிரதம மந்திரி உட்பட எல்லார் பேரையும் ஜேம்ஸ்னு மாத்தி வைக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வருவேன் சார்"

"கொண்டு வந்து"

"நம்ம மணிக்கூண்டு மேல ஏறி நின்னுட்டு நல்லா சத்தமா "ஜேம்ஸ்"-னு கூப்பிடுவேன் சார். அப்ப கட்டாயம் இந்த உலகமே திரும்பி என்னை பார்க்கும்"

ஏதோ அன்பாக சொல்லி என்னை திட்டினார். அது நமக்கு இங்கே தேவையில்லாதது. எனக்கு தெரிந்து அதன் பிறகு அவர் வகுப்பில் கேள்விகள் கேட்கப்பட்டதாய் நினைவில்லை.

ஆகவே, குழந்தைகளே இனிமே உலகத்தை திருப்புறதுக்கு ஸ்க்ரூ ட்ரைவர் தேடுற வேலைய விட்டுட்டு ஒழுங்கா படிச்சு முன்னேறுங்க.

Sunday, January 6, 2008

குணசேகரன் கோழையல்ல - சிறுகதை


மனதிற்குள் பெரிய சவாலுடனும், மடி நிறைய பயத்துடனும் சொந்த ஊரில் வந்திறங்கினான் குணசேகரன். இறக்கி விட்ட பேருந்தை புகையினூடே மறைவதைப் பார்த்துக் கோண்டே அடுத்த பேருந்தை பிடித்து வந்த வழியே போய் விடலாமா என்று யோசித்தான். பிறகு "கோழை குணசேகரன்" என்று சிறுவயது முதல் பரிகாசம் செய்யும் நண்பர்களின் கேலிப்பேச்சு உண்மையாகவே போய்விடும். "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா" - சரேலென திரும்பினான். "ச்ச, ஒரு டீக்கடையில் பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அட்வைஸ் சொல்லுமளவுக்கு நம்ம நிலைமை ஆகிப்போச்சே... ம்ம்..பார்ப்போம் என்னதான் ஆகுதுன்னு" - முடிவு செய்து கொண்டு வீட்டை நோக்கி நடை போட்டான்.

கொஞ்ச நேரம் தூங்கி விட்டு விழித்தபோது, சூடான காபியும், அன்றைய தினசரி ஒன்றும் அவனது தலையணை அருகே அலங்கரித்துக் கொண்டிருந்தன. முன்னது தாயின் பாசம், பின்னது தந்தையின் கவனிப்பு. காபியை சுவைத்து கொண்டே தினசரியில் கண்களை மேய விட்டுக் கொண்டிருந்தான் குணசேகரன்.

"இமாசல பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தலில் எட்டாம் முறையாக கள்ள ஓட்டு போட முயன்றவன் கைது" - செய்தியை பார்த்தவுடன் சட்டென புரை ஏறியது. தலையைத் தட்டிக் கொண்டே தினசரியை கீழே வைத்தான்.

"டேய் மாப்ள, என்ன நல்ல தூக்கமா? உங்க அம்மா சொன்னாங்க காலைலதான் வந்தீயாமே? வழியில ஏதும் பிரச்சினையா?" - இந்த வசனம் உதிர்த்த உதடுகளுக்கு சொந்தக்காரன் ஆறுமுகம், குணசேகரனின் நண்பன். அவனிடம் மட்டும்தான் குணசேகரன் "அந்த" விஷயத்தைப் பற்றி பேசியிருந்தான். வேறு யாருக்கும் தெரியாது, தெரிந்து விடவும் கூடாது.

"குணா, இன்னொரு மேட்டர் தெரியுமா? புதுசா வந்திருக்கிற எஸ்.பி பயங்கர ஸ்டிரிக்டாம். எலக்ஷன் பூத்ல வச்சு என்ன பிரச்சினை பண்ணாலும் எதையும் விசாரிக்காமலே அரஸ்ட் பண்ண சொல்லிட்டாராம். போன தடவை நாலு முறை கள்ள ஓட்டு போட்ட நம்ம முத்துவேலன் இந்த தடவை பூத் பக்கமே போக மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கான். பாத்துக்கப்பு, நீயெல்லாம் எம்மாத்திரம். நல்லா யோசிச்சுதான் இந்த தடவை வந்திருக்கியா? இப்ப கிடைக்கிற மரியாதை அப்புறம் கிடைக்காதுப்பா. பாத்து நடந்துக்க" சொல்லிவிட்டு அம்மா கொடுத்த காபியை குடித்துக் கொண்டே குணசேகரன் மனதிற்குள் நாலைந்து பயக்கன்றுகளை நட்டு வைத்து நீர் ஊற்றினான்.

ஆறுமுகம் போன சிறிது நேரத்திற்கெல்லாம் எழுந்து உட்கார்ந்து ஆழமாக யோசிக்க ஆரம்பித்தான் குணா. ஆறுமுகம் சொன்னதைபோல அவனுக்கு "மரியாதை" கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

சந்தானம், மெய்யப்பன் - இவர்கள் இருவர்தான் அந்த ஊரின் முக்கிய அரசியல் புள்ளிகள். தேர்தல் களத்தில் முதல் இரண்டு இடங்களை இவர்கள் இருவர்தான் எப்போதும் அலங்கரித்தார்கள். வேறு வேறு கட்சி மற்றும் ஜாதியை சேர்ந்தவர்கள். இந்த முறை மெய்யப்பன் தோல்வி என்றால், கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்லிவிடலாம் வெற்றி சந்தானத்தின் பக்கம் என்று.

குணசேகரனின் பெரிய அண்ணன் சந்தானத்தின் கட்சியை சேர்ந்தவன். அடுத்த அண்ணன் மெய்யப்பன் பக்கம். தேர்தல் சமயங்களில் இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை சுத்தமாக இருக்காது. இது ஒரு வகையில் குணசேகரனுக்கு சாதகமாக இருந்தது. அவன் ஓட்டுப்போட்டு விட்டு வரும்போது சந்தானத்தின் ஆட்களைப் பார்த்தால் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன் என்று சொல்லிவிடுவான். மெய்யப்பன் ஆட்களிடம் அவனுக்குத்தான் ஓட்டுப்போட்டேன் என்று மையைக்காட்டி நழுவி விடுவான். இதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் நண்பர்களை சேர்த்திருந்தான். இதைத்தான் அறுமுகம் "மரியாதை" என்று குறிப்பிட்டான். போர்வையுடன், புதுசா வந்திருக்கிற எஸ்.பி பற்றிய பயத்தையும் உதறி விட்டு எழுந்தான் குணா.

"குணா, போய்ட்டு சீக்கிரம் வரப்பாரு. பசங்ககிட்ட பேச்சு கொடுத்திட்டு நிக்காத. நம்ம பரஞ்சோதி மவன் கள்ள ஓட்டு போட்டான்னு சொல்லி போலிசு புடிச்சுட்டு போச்சாம். பயலுக அந்த டீக்கடை பக்கம் நின்னு பெரியவன் கிட்ட சொல்லிட்டு இருந்தானுவ. நீ சிவனேன்னு ஓட்டு போட்டுட்டு வர வழிய பாரு" - இவ்வாறு சொல்லிக்கொண்டே நம்ம கதைக்குள் எண்ட்ரி கொடுத்தார் குணா அப்பா.

"சரிப்பா" என்று தலையாட்டினான்.

மதியம் 2 மணி இருக்கும். பசங்க எல்லாம் சாப்பிட போயிருப்பாங்க. இப்ப போனாத்தான் சரியாய் இருக்கும். யார்கிட்டயும் பேச்சு குடுக்க வேண்டி இருக்காது. யோசித்தவாறே சட்டையை மாட்டிக் கொண்டு எலக்ஷன் பூத்துக்கு நடையைக் கட்டினான்.
அப்பாடா, ரெண்டுபேருதான் நிக்கிறாங்க. குணாவுக்கு இப்பொழுதுதான் கொஞ்சம் தைரியம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. உள்ளே வோட்டர்ஸ் லிஸ்ட் சரி பார்க்கும் பணியில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.

"அடுத்தது யாருப்பா". மனசு படபடவென அடித்து கொண்டது. உள்ளங்கை வேர்த்ததை குணாவால் உணர முடிந்தது. உள்ளே மெல்ல சென்றான். குணா கொடுத்த சீட்டை வாங்கிக் கொண்டு "அடையாள அட்டை இருக்கா?" என்று கேட்கப்பட்டது.

"இதோ இருக்கு சார்" வாங்கி சரி பார்த்தார். குணசேகரன் படபடப்பின் உச்சத்தில் இருந்தான்.

"சரியாய் இருக்கு. அங்க போ" - என்று அடுத்த ஆளிடம் கை காண்பித்தார். அவரும் ஏதோ லிஸ்டில் டிக் செய்து கொண்டு, அங்க மிஷின் இருக்கு என்று கைகாண்பித்தார்.

மணி 2:20 -ஐத் தொடப்பார்த்தது. குணாவின் கையில் மை வைக்கப்பட்டு கொண்டிருந்தது. மை வைத்தவன் அவனை ஒரு மாதிரி பார்த்தது, குணாவுக்கு என்னவோ போலிருந்தது. "இவன் ஒரு வேளை எல்லாரிடமும் சொல்லிவிடுவானோ" என்று பதைபதைத்தான். பூத்தில் இருந்தவரும் அவனை வித்தியாசமாக பார்த்துக்கொண்டே அடுத்த ஆளை உள்ளே கூப்பிட்டார்.

"என்ன மச்சான் இப்படி வேர்த்து போய் வர்ற. உள்ள ஏதும் இன்டர்வியூ நடத்துனாங்களா?" - பூத்துக்கு வெளியே தங்கவேலு குணாவை பார்த்து விட்டு சிரித்துக்கொண்டே கேட்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா..உள்ள ஃபேன் ஓடல" - சொல்லியவாறே நழுவினான்.

யாரிடமும் பேசாமல் வீட்டுக்குள் வந்து சட்டையை கழற்றிவிட்டு நாற்காலியில் அமர்ந்த போதுதான் குணாவுக்கு மூச்சே வந்தது.

பின்ன, என்ன சார்? சந்தானம், மெய்யப்பன் ரெண்டு பேருமே பெருச்சாளிங்கதான். இதுல எவனுமே வேணான்னு ஊர் பேர் தெரியாத ஒரு சுயேச்சைக்கு வாக்களித்து தன் வாக்கை வீணாக்க விரும்பவில்லை குணா. அதான், இந்த முறை துணிந்து தனக்கு யாரையும் பிடிக்கவில்லை என்று "நாற்பத்தி ஒன்பது ஓ" தேர்தல் சட்ட விதியின்படி 17-A ஃபார்ம் வாங்கி பூர்த்தி செய்திருந்தான். சந்தானத்தை விட்டா மெய்யப்பன், மெய்யப்பனை விட்டா சந்தானம் என்று மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டு தைரியமாய் எல்லோரும் வெளியில் நடமாடிக் கொண்டிருக்க பயந்தவாறே நாற்காலிக்குள் பதுங்கியிருக்கும் இந்த குணசேகரன் கோழையா? நீங்களே சொல்லுங்கள்....

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லைங்க. நாம ஒரு இடத்துல பொண்ணோ, மாப்ளயோ பார்க்க போறோம், நமக்கு பிடிக்கலைன்னு வைங்க. உடனே எல்லார் முன்னிலையிலும் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா? போய் லெட்டர் போடுறோம் என்று சொல்லி விட்டு அல்லவா வருகிறோம். அப்படியிருக்க, நம்ம அரசியல் சட்டம் மட்டும் எப்படி எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை, 17-A ஃபார்ம் கொடுங்கன்னு தைரியமா பூத்ல எல்லார் முன்னாடியும் ஒரு குடிமகன் சொல்வாருன்னு எதிர்பார்க்கலாம்?

தேர்தலில் போட்டியிட கல்வி அவசியம் இல்லை, அப்படி வைச்சா ஒரு காமராஜர் மாதிரி தலைவரை இழந்து விடுவோம் அல்லவா? சரி நியாயமான வாதம்தான். ஆனால் ஓட்டுபோடுபவன் மட்டும் 17-A வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கும் அளவுக்காவது படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். பல்பு, கிரிகெட் மட்டை, கத்தரிக்கோல் சின்னங்கள் மாதிரி "யாரும் பிடிக்கவில்லை" என்று ஒரு சாய்ஸ் கொடுத்தால் என்னவாகப் போகிறது? அதை விட்டு ஃபார்ம் வாங்கி, அதில் எனக்கு யாரையும் பிடிக்கவில்லையென்றும், அதற்கான காரணத்தையும் விலாவரியாக மழைக்குக்கூட பள்ளிக்கு ஒதுங்காத Mr.குடிமகன் எழுதிக் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் புத்திசாலித்தனம் என எனக்கு புரியவில்லை.

என்ன குழந்தைகளே, இன்னும் இந்த நாற்பத்தி ஒன்பது ஓ பற்றி எதுவும் தெரியலன்னா கீழே இருக்குற இணையதள முகவரிக்கு செல்லுங்கள்.

http://en.wikipedia.org/wiki/49-O