Friday, March 21, 2008

செல்வி ஓடிப் போகிறாள்....

1 . அவன்

யாரோ ஜன்னலை சாத்துவது போன்ற உணர்வு அவருக்கு தெரிந்தது. கண் விழித்துப் பார்த்தார். தூக்கத்தில் கனவு கண்டதுபோல் உணர்ந்தார். இருந்தும் உறுதிப்படுத்திக் கொள்ள, எழுந்து கண்ணாடியை அணிந்தார். இரவு விளக்கின் வெளிச்சத்தில் மனைவி அயர்ந்து தூங்குவது தெரிந்தது. மெல்ல எழுந்து நடு அறைக்கு வந்து விளக்கை போட்டார். மகளின் அறை திறந்திருப்பது தெரிந்து உள்ளே சென்றார். ஜன்னல் சாத்தப்பட்டிருந்தது. மேஜை இருந்த இடத்திலேயே இருந்தது. அதன் மேலே மேஜை விளக்கும் இருந்தது. ஆனால் மகள் மட்டும் இல்லை!!! அதற்கு பதில் அந்தக் கடிதம் மட்டும் மேஜை மேல் இருந்தது.

கடிதத்தை பிரித்துப்படிக்க ஆரம்பித்ததும், கண்கள் குளமாக ஆரம்பித்தது. அன்புள்ள என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த கடிதத்தின் வரிகள் இவ்வாறு படர்ந்திருந்தன.

"...........நான் யாருடன் வாழ்வதற்காக செல்கிறேன் என்று உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. அவரை உங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் திருமணம் என்பது நீங்கள், நான் மற்றும் அவர் மட்டும் சேர்ந்து நடத்துவது அல்ல. உற்றார், உறவினர், சொந்தம் என்று எங்கிருந்தோ வந்த இவர்கள்தான் அதை தீர்மானிக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி என்ற ஒன்றை சொல்லி இவர்கள் முன் அவர் அவமானப்படுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அவருடைய அப்பாவும் எங்கள் திருமணத்தை ஆதரிக்காததால்தான் இறுதியில் இந்த முடிவுக்கு வந்தோம்.

இந்தத் திருமணத்தின் காயம் காலப்போக்கில் ஆறும். அன்று உங்கள் மடியில் புதைந்து அழுது மன்னிப்பு தேடுவேன்.

-இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்"


கடிதத்தை படித்து விட்டு கண்களை தோளிலிருந்த துண்டினால் ஒற்றிக் கொண்டார். கிரில் கதவைத் திறந்து மகள் வெளியேறி நடந்து கொண்டிருந்ததை ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடிதத்தை மடித்து தனக்கு பிடித்த மகாகவி கவிதைத் தொகுப்பு புத்தகத்தின் இடையில் வைத்து மூடினார். மேஜை விளக்கை அணைக்க மறந்திருந்தார். அந்த வெளிச்சத்தில் புத்தகம் ஒரு கடிதத்தை படித்துக் கொண்டிருந்தது.

2 . அவள்

அந்த பாலைவனத்தில் தூரத்தில் காத்திருக்கும் ஒரு உருவத்தை நோக்கி அவள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள். ஓட்டம் கடுமையாக இருந்தது. திடீரென்று வெயிலின் உக்கிரத்தில் அவள் மயங்கி விழுந்தாள். சட்டென கண் விழித்தாள். மின் விசிறி அதன் உச்சத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அருகில் அன்புக் கணவர் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த நொடியே அவளுக்கு புரிந்தது, பாலைவனம் கனவில்தான் வந்ததென்று. ஆனால் தாகம் மட்டும் உண்மையாக இருந்தது.

சமையலறைக்கு சென்று தண்ணீர் அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பக்கத்து அறையை எதேச்சையாகப் பார்த்தாள். விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இந்த வீடிலிருப்பவர்கள் சோம்பேறித்தனத்தில் E.B.-க்காரன் வாழ்கிறான் என்று சொல்லிக் கொண்டு விளக்கை அணைக்கச் சென்றாள்.

புத்தகத்தின் இடையில் அந்தக் கடிதம் படபடத்துக் கொண்டிருந்தது. காலியாய் இருக்கும் படுக்கை, பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் கடிதம் - அவளால் யூகிக்க முதிந்தது. பிரித்துப்படித்தாள். அழுகைப் பொத்துக்கொண்டு வந்தது. முந்தானையில் வாயை மூடி முடிந்த மட்டும் அழுதாள். கடிதத்தை மடித்து வைத்துவிட்டு, கண்களைத் துடைத்தாள். கடிகாரத்தையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். மணி பதினொண்ணரையைக் காட்டியது. அவளுக்கு மயங்கி விழத்தோன்றியது. சற்றே தன்னைத் தேற்றிக் கொண்டு விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்தாள்.

3. அவர்கள்

அந்த ரயில் நிலையத்தில் அவன் மட்டும் தனித்திருந்தான். எப்பொழுதும் அந்த நேரத்தில் இறங்கி செல்லும் பயணிகளையே பார்த்திருந்த அந்த ரயில் நிலையம் அப்பொழுதுதான் ரயில் ஏறக் காத்திருக்கும் ஒருவனைப் பார்த்திருந்தது.
"சரியா 11:30 மணிக்கு ட்ரெயின். நீ மட்டும் வரலை, அப்புறம் நான் உன் கிளாஸ்மேட் ரெட்டை ஜடை கனகா அவளோட புருஷன். எங்கப்பா ஒத்த கால்ல நிக்கிறாரு, அவளை கட்டிக்கச் சொல்லி. மறந்துடாத. அப்புறம் என்ன சொல்லி குத்தமில்லை" - சற்று அதிகமாகவே மிரட்டியிருந்தான்.

இருந்தும் அவள் 11:20 ஆகியும் வராதது சற்று பயத்தை ஏற்படுத்தியது. இன்னும் ஐந்து நிமிடத்தில் அவள் வரவில்லை என்றால் அவன் காதல், காதலி என எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியதுதான்.

அப்பாடா, தூரத்தில் அவள் வருவது தெரிந்தது. அதள பாதாளத்தில் விழ இருந்த காதலை 11:25-க்கு வந்து காப்பாற்றி விட்டாள். இப்பொழுது பயம் விலக குற்ற உணர்ச்சி எட்டிப்பார்த்தது. அம்மா எப்படியெல்லாம் அழுவாளோ, நினைத்தாலே பாவமாய் இருந்தது. அந்தக் கடிதம் நிச்சயம் அவன் நிலைமையை அவளுக்கு புரிய வைத்திருக்கும். அடுத்த சில மாதங்களில் கண்டிப்பாய் கடிதம் எழுத வேண்டும்.


சரியாய் பதினொண்ணரைக்கு ரயில் வந்தது. இருவரும் கைகோர்த்தபடி ஏறி அமர்ந்தனர். காதலர்களை சுமந்த புது உற்சாகத்தில் ரயில் புது வேகம் எடுத்தது.

4. மீண்டும் அவள்

தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த அவள் மெல்ல எழுந்து பார்த்தாள். எல்லாரும் உறங்கி கொண்டிருந்தார்கள். ஏற்கனவே எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து மேஜையில் வைத்து விட்டு, உடைகளை மெல்ல எடுத்து பெட்டிக்குள் வைத்தாள். நினைவுக்கு வந்த மேலும் சில அத்தியாவசியப் பொருள்களையும் எடுத்து வைத்தாள். பெட்டியை எடுத்து வைத்துவிட்டு மணியைப் பார்த்தாள். 11:10 ஆகியிருந்தது. இன்னும் இருபது நிமிடங்களில் ரயில் வந்து விடும். அவனோடு வாழப்போகும் புதுவாழ்வை நினைக்க மகிழ்ச்சியாய் இருந்தது.

11:15-க்கு பெட்டியை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். பெரிய மீசையுடன், கையில் அவள் எழுதிய கடிதத்துடன் அவள் தந்தை நின்றிருந்தார்.

"சீ..நாயே, குடும்ப மானத்த வாங்க கெளம்பிட்டியா" என்று வேகமாய் ஒரு அறை விட்டார். கதவின் விளிம்பில் பட்டு நெற்றியில் ரத்தம் சொட்ட அவள் விழுந்தாள். மேலும் சில அறைகள் விழுந்தது. விளக்கு போடப்பட்டு வீட்டில் இருந்த அனைவரும் எழுந்தனர்.

அம்மா அழுது தீர்த்தாள். வீடே அல்லோகல்லோலப்பட்டிருந்தது. ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தார்கள்.

அவள் ஒரு ஓரமாய் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள். மணி 11:45-ஐ தாண்டியிருந்தது.


5. மீண்டும் அவன்

ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து விட்டு அவசர அவசரமாக அவன் ஓடி வந்தான். ரயில் நிலையத்தில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மணி பார்த்தான். இன்னும் அரைமணி நேரம் இருந்தது.

பயணிகள் காத்திருக்க போடப்பட்டிருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தான். பதட்டத்தைக் குறைக்க பையில் வைத்திருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்தான்.

"சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா...சூரிய சந்திரரோ" - சட்டென்று கண்முன் அவள்தான் ஞாபகத்துக்கு வந்தாள். இதே கவிதையை எத்தனை முறை அவளைப் பார்த்து கூறியிருப்பான். எல்லா சமயங்களிலும் அவளிடமிருந்து ஒரே பதில்தான் வரும். "உங்களுக்கு வேற வேலையே இல்ல, போங்க". சிரித்த படியே புத்தகத்தை மூடிவிட்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

மணி 11:25-ஐத் தொட்டிருந்தது. இன்னும் அவளைக் காணவில்லை. பயத்துடன் சற்றே அழுகையும் சேர ஆரம்பித்தது.

ஐந்து நிமிடம் தாமதமாய் ரயில் வந்தது. ஆனால் அவள் வரவில்லை. கண்களைத் துடைத்த படியே எழுந்தான். ரயில் பெட்டிக்குள் தனியாய் அமர்ந்தான். தலையை எட்டிப்பார்த்து தூரத்தில் அவள் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டேயிருந்தான்.

இது எதுவும் தெரியாத ரயில் வழக்கம் போல் தன் பயணத்தை தொடங்கியது.